Friday 6 December 2013

இவன் வேற மாதிரி..

நம்மைச் சுற்றியிருப்பவர்களின் கருத்துக்களாலும்,கணிப்புக்களாலும் நம்மைப் பற்றி ஏற்படுத்திக் கொண்ட சுய பிம்பம் தான் நம்மில் கர்வத்தையோ,தாழ்வு மனப்பான்மையோ ஏற்படுத்துகிறது. இந்த மாணவனை , என் செக்ஷனுக்கு கொடுங்கள் , இந்த முறை 10 ஆம் வகுப்பு பள்ளி முதல் மாணவன், என் செக்ஷனிலிருந்து வர வேண்டும் என்றெல்லாம் ஆசிரியர்கள் என்னைப் பற்றி பேசுவது கேள்விப்படும் போது, அந்த அறிவுச் செருக்கு வருவது இயல்பு தானே.அவர்களின் நம்பிக்கைகளை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், அது குறித்த வருத்தங்கள் கிடையாது.உழைப்புக்கேற்ற கூலி எனக் கடந்து வந்து விட்டேன்.

கல்லூரிப் படிப்பையும் முடித்து, ஒரு தனியார் நிறுவனத்தின் கணிப்பொறி சார்ந்த துறையில் நுழைந்தாகி விட்டது.அங்கு தான் அவனைச் சந்தித்தேன்.கிராமத்தை தன் உடையில்,தோற்றத்தில்,பேச்சில் கொண்டிருந்தான்.பழகுவதற்கு எளியவனாகத் தெரியவில்லை.உணவு இடைவேளைகளில் புன்முறுவலோடு சரி.நிறுவனம் தரக்கட்டுப்பாடு பெறுவதான முயற்சியில், என்னை ஒருங்கிணைப்பாளனாக அமர்த்தியிருந்தது.ஒரு நாள், அவனுடைய மென்பொருள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த ஆவணங்களைப் பார்வையிடுவதான சந்திப்பில் , என்னுடைய கருத்துக்களில் அவன் உடன்படவில்லை.உரத்த குரலில் "நீ முட்டாள் உன்னுடன் என் நேரத்தை விரயமிட விரும்பவில்லை" என்று எழுந்து சென்றான்.திடுக்கிட்ட என்னை , மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள்.என் கணிப்பில் , அவன் முரடனாய், மன முதிர்ச்சி அற்றவனாய் தாழ்ந்து போனான்.

அடுத்த நாள் உணவு இடைவேளையில்,ஒரு மரத்தடியில் நின்றிருந்த என்னைப் பார்த்து புன்முறுவலுடன் வந்தான்."மன்னித்துக் கொள்,நான் நேற்று அப்படி நடந்து கொண்டது தவறு" என்றான்.நான் ஒரு தலையாட்டுதலோடு நிறுத்திக் கொண்டேன்.எந்த ஊர், என்ன படிப்பு, எந்த வருடம் என்ற விசாரிப்புகளுக்குப் பிறகு இறுக்கம் தளர்ந்து தமிழில் பேசிக் கொள்ள ஆரம்பித்தோம்.இப்படியாகத் தொடங்கிய பழக்கம், வாடா,போடா என்ற அளவிற்கு நெருக்கமானது ஒரு விடுமுறை நாளில். உற்சாக பானம் அருந்தலாம் என்று முடிவு செய்து, அவன் அறைக்குச் சென்றேன்.அவனுடைய மற்றொரு நண்பனுடன்,சமையல் அறையில் இருந்தான்."சமைக்கத் தெரியுமா உனக்கு?" என்ற கேள்விக்கு  "என்னங்க இப்படிக் கேட்டுடிங்க,பக்கத்து வீட்டு மாமி கூட இவன்ட சமையல் டிப்ஸ் கேக்கிற அளவுக்கு ஃபேமஸ்" அவன் நண்பன் பதிலளித்தான்.அதற்கு அவன், "மாடு மேச்சாக் கூட இவன் மேய்க்கிற மாதிரி வராதுனு சொல்லணும்" என்றான்.அந்த ஈடுபாட்டை சமைக்கும் நேர்த்தியில்,உணவின் ருசியில் தெரிந்து கொண்டேன்.தாக சாந்தியில் , ஏதோ அலுவலக விஷயம் குறித்த பேச்சில் சொன்னான்,"அன்று நான் சொன்ன விதம் தவறாக இருந்தாலும், என் கருத்து இன்னும் அது தான்"  என்றான்."இருக்கலாம்,அதைச் சொல்வதற்கான தகுதி உனக்கு உண்டா"? விவாதம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. உரத்த குரலில் , அவன் ஆரம்பித்தான்.மென்பொருள்,அதன் கட்டமைப்பு, வடிவமைக்கும் முறை , எந்த புதிய மென்பொருளையும் கற்கும் முறை ,ஆவணப்படுத்தும் திறன் என ஒரு மணி நேரம் நடத்திய பிரசங்கத்தில் தான் முதல் முறையாக , என் சுய பிம்பம் சுக்கு நூறாக உடைந்தது.அவன் மிகுந்த திறமைசாலி , வித்தியாசமானவன் என்று கண்டு கொண்டேன். எந்த ஒரு விஷயத்திலும்,பிரச்சினையிலும் அவனுக்கென்று ஒரு தெளிவான பார்வை இருந்தது.தினமும் ஏதோ ஒரு விஷயத்தில் என்னை ஆச்சரியப்படுத்தினான்.கொஞ்சம் , கொஞ்சமாய் அவனது ரசிகனாகவே மாறிப் போனேன்.அலுவலக விஷயங்களில், அவனிடம் ஒரு கருத்து கேட்டு, விவாதம் புரிந்தே காரியங்கள் ஆற்றினேன்.

ஒரு நாள் "எனக்கு தங்குவதற்கு ஒரு ரூம் ஏற்பாடு பண்ணுடா" என்றான். "ஏற்கனவே இருந்த ரூம் என்ன ஆச்சு"."பிடிக்கலை, வெளியே வந்துட்டேன்". "இப்ப எங்கே தங்கிற?". "ஆஃபீஸ் முடிஞ்சதும், எங்கேயாவது நைட் ஷோ.அப்புறம் பஸ் ஸ்டாண்ட் ல போய் தூங்கிட்டு , காலைல கட்டண கடன்,குளியலை முடித்து, 2 செட் டிரஸ் இந்த பையில் , மாத்தி , மாத்தி போட்டுட்டு ஆஃபீஸ் வர்றேன்" என்று சொல்லி , எனக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்தான்.நண்பர் ஒருவரின் உதவியுடன் , அன்றே ஒரு ரூம் ஏற்பாடு செய்தேன்,இன்னும் இருவருடனும்  அறையை, வாடகையை ஷேர் பண்ண வேண்டும்.அதன் பின் அவனை , அலுவலகத்தில் சந்திக்க முடியவில்லை. ஒரு நாள் அலுவலக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வேறு அலுவலகத்தில் சேர்ந்து விட்டதாகவும், அன்று மாலை சந்திப்பதாகவும் கூறினான்.மாலையில் வந்த போது, நிறைய மாற்றம் தென்பட்டது.மிகத் தரமான உடை, காலணி,அக்கறையுடன் தலை வாரி இருந்தான்.புது அலுவலகம்,அவனது புராஜக்ட் பற்றி ஈடுபாட்டுடன் பேசினான்.விடை பெறும் முன், 2000 ரூபாய் வேணுண்டா, மகளுக்கு உடம்பு சரியில்லை என்றான்.திருமணம் ஆகி விட்டதா, எனக்குத் தெரியாதே என்றேன். ஆமாடா, படிச்சிட்டு இருக்கும் போதே, காதல் திருமணம் என்றான்.உடன் படித்தவர்களா?  சிரித்தான்,அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றான். பணம் கொடுத்தனுப்பினேன்.குடும்பத்தை சீக்கிரமா சென்னைக்கு அழைத்து வரச் சொன்னேன்.

ஒரு 4 மாத இடைவெளியில், அவன் உடன் தங்கியிருந்த நண்பர் தொலைபேசினார்.உடனே சந்திக்க வேண்டும் என்றார்.மாலை சந்தித்தோம்.நேராக விஷயத்திற்கு வந்தார்.நீங்கள் சிபாரிசு செய்ததால் , அறையில் தங்க இடம் கொடுத்தோம், ஆனால் இப்போது நிம்மதி இல்லாமல் தவிக்கிறோம்.யாரோ லோக்கல் தாதாவை வீட்டுக்கு அழைத்து வந்து தினமும் மது அருந்துவது,சண்டையிடுவது,பக்கத்து வீட்டுக்காரனை அடிக்கச் சென்றது,வாடகை பாக்கி என ஏகப்பட்ட புகார்கள்.வருத்தம் தெரிவித்து,வாடகை பாக்கியை , உடனே கொடுத்து விட்டு, "அடுத்து அவன் வீட்டுக்கு வரும் போது, காலி பண்ணச் சொல்லுங்கள்,என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்" என்று சொல்லி விட்டு வந்தேன்.என்ன மாதிரியானவன் இவன் என வியப்பாக,கோபமாக,வருத்தமாக இருந்தது.அதன் பின் அவனைப் பற்றிய எண்ணம் அதிகமாக இல்லை, சிறிதும் பெரிதுமாக கொடுத்த பணம் 5000 அவ்வளவு தான் , என நினைத்து ஏறக்குறைய மறந்து விட்ட நிலையில், ஒரு நாள் என் அறைக்கு வந்தான்.நான் உன்னிடம் எதுவும் பேச விரும்பவில்லை , என்று நான் சொல்லும் போது, 2500 ரூபாயை எண்ணி என் கையில் தந்து, இன்னும் 2600 உனக்கு தர வேண்டும், இப்பவே வேண்டுமென்றால்,ஏதாவது பொருளாக வாங்கு, நான் கிரடிட் கார்டில் பே பண்ணிக்கிறேன் என்றான்.எனக்கு திருமணம் நிச்சயமான நிலையில் , அதை வாங்கிக் கொள்வதே நல்லது , என்று முடிவு செய்து ஒரு காலணி,சட்டை வாங்கிக் கொண்டு , மேலதிகமான பணத்தை நான்  செலுத்தினேன்.அவன் வழக்கமாகத் தான் இருந்தான்.என்னால் இயல்பாய் பேச முடியவில்லை.

அதன் பின் , நான் திருமண வேலைகளில் மும்முரமாகி விட்டேன்.திருமணம் என்னுடைய சொந்த ஊரில் நடந்ததால் , சென்னை நண்பர்கள் வர முடியவில்லை,அவனும் வரவில்லை.பின் ஒரு நாள் , அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பு.அவன் அடையாளம் சொல்லி, பாரி முனையருகே, நடு ரோட்டில் உணர்வின்றி கிடப்பதாகவும்,உடனே வரும்படி அழைத்தார்கள்.அவன் அலுவலகத்திற்கும் தகவல் சொல்லியதாகச் சொன்னார்கள்.அரை நாள் விடுப்பில் , அங்கு சென்றால் அவனுடைய அலுவலக நண்பர்கள் சிலர் , ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து , ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து விட்டிருந்தனர்.மருத்துவமனைக்கு விரைந்தேன்.அளவுக்கு அதிகமான குடிபோதையில், நினைவு தப்பி விழுந்து கிடந்திருக்கிறான்.உயிருக்கு ஆபத்தில்லையாம்.அவனுடைய அலுவலகமே செலவை ஏற்றுக் கொண்டது.இனி அவனை சந்திக்கவே கூடாது என்ற முடிவுடன் வீடு திரும்பினேன்.

நாட்கள் உருண்டோட,எல்லா மென் பொறியாளர் போல நானும் அமெரிக்கா சென்றேன்.ஒரு வார இறுதியில், பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கும் போது அவனைப் பற்றிய பேச்சு வந்தது.அவன் பெயரைக் கேட்டதுமே அவர் திடுக்கிட்டது போல் தோன்றினார்.அவன் செத்துப் போய் விட்டான் என்றார் கடுமையான குரலில்.நீங்கள் அவன் நண்பரா என்றார், ஆம்,இல்லை எனத் தடுமாறினேன்.அவர் "புரிகிறது, விடுங்கள்" என்று சொல்லி வேறு விஷயங்கள் பேச ஆரம்பித்து விட்டார்.என்னால் முழுமையாக உரையாடலில் ஈடுபடமுடியவில்லை.விடை பெற்றுக் கொண்டேன்.எப்படி இறந்திருப்பான்?குடித்து விட்டு வண்டி ஓட்டி ,விபத்து நடந்திருக்குமோ , என்னவெல்லாமோ சிந்தனை.அவனை மறப்பதற்கு சிறிது காலமாகி விட்டது.நானும் சில வருடங்களுக்குப் பின் இந்தியா திரும்பி விட்டேன்.

ஒரு நாள் என்னுடைய மின்னஞ்சலில், ஒரு செய்தி அவனிடமிருந்து,உடனடியாக அழைக்கச் சொல்லி தொலைபேசி நம்பர் கொடுத்திருந்தான்.எனக்கு அவன் கொடுத்த ஆகப் பெரிய அதிர்ச்சி அது தான்.அமெரிக்க எண்.உடனே அழைத்தேன்.தான் அழைப்பதாக்க் கூறி, துண்டித்தான்.உடனே அழைத்தான்.உற்சாகமாக பேசினான்.மென் பொறியாளர்களின் கனவு நிறுவனம் ஒன்றில் பணி புரிவதாகவும், தினமும் வேலைக்கு சைக்கிளில் செல்வதாகவும்,அவனுடைய சைக்கிள் பயணம் அங்கு மிகவும் பேசப்படுவதாகவும்,இன்னும் என்னவெல்லாமோ சொன்னான்.உணர்ச்சி மிகுதியில் எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை.தொலை தூர அழைப்பு என்பதால் வெகு நேரம் பேச முடியவில்லை. அதன் பின், இன்று வரை அவன் தொடர்பு கொள்ளவில்லை. எனக்குத் தெரியும் கண்டிப்பாக எனக்கு மற்றுமொறு யூகிக்க முடியா , அதிர்ச்சியைக் கொடுப்பான் அடுத்த சந்திப்பில்... அது இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும்.


No comments:

Post a Comment